யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகள் மூலம் சச்சரவும் குழப்பமும் உருவாகியுள்ளது.
அரச அதிகாரிகள் அர்ச்சுனா எம்பியை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற கோரியதால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. பின்னர், கூட்டத்தின் தலைவராக இருக்கும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்டு, நிலைமை சுமூகமாக்கினார்.
இன்றைய (13) கூட்டத்தில், இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக தனது பதவியை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த. சத்தியமூர்த்தி, அதிகாரிகளை கேலி செய்யும் நடவடிக்கைகள் அவர்களின் மனநிலையை பாதிக்கும் மற்றும் மக்கள் சேவைகளை பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கூட்டங்களில் அதிகாரிகள் அவமதிக்கப்படுவதால், அவர்கள் கூட்டங்களை விட்டு வெளியேறும் நிலையும் உருவாகும் எனக்கூறினார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும்போது நாங்கள் வரவேற்க தயாராக உள்ளோம். ஆனால் நடைமுறைகளை மீறி அத்துமீறிப் பிரவேசிக்க முயன்றால், கடவுளாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.
அர்ச்சுனா எம்பி அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து ஆடம்பரமாக நடந்துகொண்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது.