உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரானவர், பலாங்கொடை சமனலவெவ – சீலகம பகுதியில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் தகராறு
குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி, உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த சந்தேகநபரின் மகள், தனது பரீட்சை அனுமதி அட்டை, சீருடை மற்றும் சில புத்தகங்களை மட்டுமே அவசரமாக எடுத்துக்கொண்டு தாயுடன் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர் அன்றிரவு வீட்டிற்கு வந்து தீ வைத்ததால், வீட்டின் ஒரு பகுதி எரிந்து நாசமானது. மேலும், அந்தச் சிறுமியின் மீதமிருந்த அனைத்துப் புத்தகங்களும், உடைகளும் முற்றிலும் எரிந்து அழிந்துபோனதாகவும் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில், தனது வீட்டிற்கு வேறு யாரோ தீ வைத்ததாகச் சந்தேகநபர் கூறி வந்தபோதும், பொலிஸாரின் தொடர் விசாரணையில், தானே தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், வீடு தீக்கிரையாகி, புத்தகங்கள் அனைத்தும் அழிந்த நிலையிலும், அந்தச் சிறுமி மனந்தளராமல் துணிச்சலுடன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக அப்பகுதி மக்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
A father, who is a carpenter from Samanalawewa in Balangoda, was remanded until the 17th by the Balangoda Magistrate’s Court yesterday (11) for allegedly burning his daughter’s school books and clothes while she was preparing for the Advanced Level examination. The incident occurred on the night of the 9th when the intoxicated father’s drunken argument caused his wife and children to flee to a relative’s house. Although the daughter managed to save her exam admission card and uniform, the father set fire to the house later that night, destroying the rest of her study material. Despite the complete loss of her books, the community noted that the determined student still proceeded to sit for her examination.



