தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகராக உள்ள அல்லு அர்ஜுனின் கைது சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது “புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பான இரவு, ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் ப்ரீமியர் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்வுக்கு அல்லு அர்ஜுன் வருவார் என்று தகவல் அறிந்த ரசிகர்கள் பெரிய எண்ணிக்கையில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, மற்றும் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற ரசிகை மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரது மகனும் மயங்கி விழுந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அனர்த்தத்திற்கு முன்னறிவிப்பின்றி நடிகர் வருகை தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு, சிக்காட்பள்ளி பொலிஸார் தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
ரேவதியின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். அதே நேரத்தில், சம்பவம் தொடர்பாக இன்று (13) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.