அரச அதிகாரிகள் கல்வித் தகுதியிலும் அறிவு பூர்வமான திறன்களிலும் மேலோங்கியவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களை அணுகுவதில் சரியான முறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடந்த தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை குறிப்பிட்டார்.
அர்சுனா மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையேயான முரண்பாடுகள் குறித்து கேட்டபோது, சிறீதரன் எம்.பி. கூறியதாவது:
“அரச அதிகாரிகள் கல்வி தகுதியும் அனுபவமும் உள்ளவர்களாக இருப்பதால், அவர்களை அணுகும்போது மனிதாபிமானத்துடன், கண்ணியத்துடன், மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் நெறியில் இயங்குவது முக்கியம். தமிழரசுக் கட்சி இதுவரை இந்த நெறியையே பின்பற்றி செயல்பட்டுள்ளது, மேலும் தொடர்ச்சியாக அதைப் பின்பற்றும்.”
சபாநாயகர் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், “சபாநாயகராக பதவி வகிக்க கல்வித் தகுதி குறித்து எந்தவிதமான சட்டப்பிரச்னைகளும் இல்லை. எனினும் கலாநிதி பட்டத்தை பயன்படுத்திய விதம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்” என்றார்.