யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியாக மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவரை வைத்தியசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கில், யாழ். நீதிவான் நீதிமன்றம் அவருக்கு ரூ.100,000 பெறுமதியான சரீரப் பிணை வழங்கியதுடன், 2025 பெப்ரவரி 7ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது. மேலும், வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமானால், நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம், இந்த உத்தரவின் அடிப்படையில், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார் என சுட்டிக்காட்டியுள்ளது. உரிய அனுமதியின்றி உள்ளே நுழைய முயற்சிக்கப்படும் பட்சத்தில், அவரை யாழ் காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு பணியாளர்கள், இத்தகைய சூழலில் அமைதியாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குக்குட்பட்ட முறையிலும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.