இலங்கையில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறான தண்டனைகள் உடல் ரீதியாகவும், நீண்ட காலத்துக்கு உள ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் சிறுவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்குக் கூட வழிவகுக்கிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மீதான அனைத்து விதமான கொடூரமான தண்டனைகளையும் தடை செய்யும் நோக்கில், ‘தண்டனைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம்’ (Penal Code (Amendment) Bill) கடந்த ஜூலை மாதம் 4 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்றுள்ளது.

உடல் ரீதியான தண்டனையை முற்றாக நீக்குவது என்பது, பயம் அல்லது வன்முறைக்குப் பதிலாக, குழந்தைகளின் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும் மரியாதைக்குரிய ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டச் சீர்திருத்தங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தாமல் அல்லது தவறாகச் சித்தரிக்காமல், ஆரோக்கியமான விவாதங்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்று ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பது என்பது குடும்பங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் சட்டபூர்வமான மற்றும் தார்மீகப் பொறுப்பு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
The Human Rights Commission of Sri Lanka (HRCSL) has expressed deep concern over the increasing violation of children’s rights and the rise in corporal punishment incidents, noting that such punishments cause long-term physical and psychological harm. The HRCSL welcomed the gazetting of the ‘Penal Code (Amendment) Bill’ on July 4th, which aims to prohibit all forms of cruel punishment for those under 18. The HRCSL Chairman emphasized that eliminating corporal punishment is a collective responsibility to foster respectful discipline, and urged the public to engage in healthy discussions without politicizing or misrepresenting these reforms.


