குடிமை உணர்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதில் அரசின் பங்கை வலியுறுத்தி, பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்குக் கடிதம் ஒன்றையும் சங்கம் அனுப்பியுள்ளது.
பாடசாலைகளில் சட்டம்
ஆரம்பக் கல்வி வகுப்புகளிலேயே சட்டத்தை ஒரு கட்டாயப் பாடமாகவும், உயர் வகுப்புகளில் ஒரு விருப்பப் பாடமாகவும் அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
உலகில் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலைகளில் சட்டம் கற்பிப்பதாகவும், இலங்கையின் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.