கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ் பிரஜைகள், நேற்று நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் இலங்கை வந்திருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். விமான நிலையத்தின் தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களிடம் இருந்த மாசிடோனியா விசாக்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
விசாக்கள் எல்லை கண்காணிப்புப் பிரிவின் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை போலியானவை என உறுதிசெய்யப்பட்டன. விசாரணையில், இவர்கள் நாட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குள் மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.