டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட இருவர் தாக்கல் செய்த மனுக்களை ஒக்டோபர் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்த மனுக்களில் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு இன்னும் அழைப்பாணை கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, வழக்கை விரைவாக விசாரிப்பதற்கான ஒரு திகதியைக் கோரினார்.
அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் இந்த வழக்கை ஒக்டோபர் மாதம் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுக்களில், பிரதமர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உட்பட 31 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இலங்கை அரசு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பான இரண்டு அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காகவே இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்றும், இது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் நாட்டின் ஆட்பதிவு திணைக்களத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், அரசின் இந்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும் தன்னிச்சையானது என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இது, இலங்கையின் இறையாண்மை, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் வெளிநாட்டு அரசாங்கம் தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீற வழிவகுக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும், அதற்கு தொடர்பான அமைச்சரவை முடிவுகளையும் வலுவற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
The Sri Lankan Supreme Court has scheduled a hearing for October 17 on two petitions filed by former minister Wimal Weerawansa and others. The petitions challenge the memorandum of understanding signed with India to implement a digital identity card project for Sri Lankan citizens. The petitioners argue that the agreement compromises national sovereignty and security by potentially allowing access to personal data by a foreign government. The court ordered the issuance of summons to the respondents, including the Prime Minister and other ministers, who had not yet received them.