கடந்த சில நாட்களாக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. இதனால், தபால் சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.
நேற்றுடன் (24) இந்தப் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் நுவரெலியா தபால் நிலையத்தின் அழகைக் காணவோ, அங்குள்ள சேவைகளைப் பெறவோ வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும், இன்று சேவைகள் மீண்டும் தொடங்கியதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்திற்குள் சென்று பார்வையிட்டனர். அங்கு தங்களுக்குத் தேவையான சேவைகளையும் பெற்றுக்கொண்டதை காண முடிந்தது.