ஐந்தாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை தபால் தொழிற்சங்கத்தினர் தற்போது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மொத்தம் 19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு (Central Mail Exchange) முன்பு அவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய தபால் பரிமாற்றத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். தபால் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து வருவதால், மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் தபால் ஊழியர்கள், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் கூடுதல் நேரம் (overtime) தொடர்பான முடிவுகளைத் திரும்பப் பெற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கடந்த சில நாட்களாகத் தபால் சேவைகளைப் பெறச் சென்ற பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.