உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர், தனது மனைவி ஷானவியை நடிகை நோரா ஃபதேகி போல உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறி சித்திரவதை செய்துள்ளார்.
திருமணமான நாள் முதல் ஷானவியை தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார். உடல்நலம் சரியில்லாத நாட்களில் உடற்பயிற்சி செய்யத் தவறினால், அவருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். மேலும், ஆபாசப் படங்களில் வருவதுபோல நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மனைவி மறுத்தால், கையில் கிடைத்த பொருள்களால் அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் இந்தக் கொடுமைகளுடன், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஷானவி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வரதட்சணை கொண்டு வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் எனக் கூறி கணவரும் அவரது குடும்பத்தினரும் ஷானவியை விரட்டிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே ₹24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ₹10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாகக் கொடுத்தும், மேலும் பணம், நகை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக ஷானவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.