அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில், கழிவறையில் இரகசிய கேமரா வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்ததாக ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கும் இந்த மருத்துவர், 4,500 வீடியோக்களை சேகரித்துள்ளார்.
ஒரு பெண் மருத்துவர் மருத்துவமனையின் கழிவறையில் இரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த கேமராவைக் கண்டுபிடித்ததையடுத்து, இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே மருத்துவமனையில் பணிபுரியும் 28 வயதுடைய ரயான் சோ என்ற மருத்துவர் இரவில் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததைக் கண்டுபிடித்தனர். சிங்கப்பூர் வம்சாவளியைச் சேர்ந்த அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது, தன்னுடைய இந்த தவறான செயலை அவர் ஒப்புக்கொண்டார். 2021ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராகப் பணியில் சேர்ந்ததில் இருந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார். அவரது கைபேசி மற்றும் மடிக்கணினிகளில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பின்னர் அவரது சிங்கப்பூர் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. தற்போது 28 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன் அடிப்படையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.