முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு கிராமத்தில், 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் கிராமத்தில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் அவர் காணப்பட்டதை அறிந்து, கிராம மக்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தை பார்வையிட வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், மூங்கிலாறு பகுதியில் காணி ஒன்றை விலைக்கு வாங்கி, சிறிய கைத்தொழில் ஒன்றைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது குறித்துப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சில நாட்களுக்கு முன்னர் மாங்குளம், பாலைப்பாணி கிராமத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
An 84-year-old woman was found dead under suspicious circumstances in her home in the Mungilaru area of Mullaitivu. The deceased, identified as Gopalan Kundumani from Jaffna, was found on a property she had recently purchased to start a small business. The body was discovered at the same house where a young woman was found murdered four years ago. The incident, along with another recent discovery of a woman’s body with cut wounds in Palaippani village, has caused alarm among residents in the Mullaitivu district. Police are investigating whether the death was a homicide.