2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தற்போது தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்களை வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையும், தமிழ் மொழிபெயர்ப்பைப் பெற நான்கரை ஆண்டுகள் ஆனதையும் சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு விரைவான ஒரு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
அதனடிப்படையில், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
2015 மார்ச் 3ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டத்திற்கு முரணானது என்றும், அதனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.