கண்டி-கட்டுகஸ்தோட்டை சாலையில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயங்களுடன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கட்டுகஸ்தோட்டை காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இரவு நேர பந்தயங்கள்
அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவரும், கட்டுகஸ்தோட்டை வீதியில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டபோது, சாலையோரத்தில் இருந்த கான்கிரீட் பாதுகாப்புத் தூணில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் 18 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இப்பகுதியில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை வைத்து இரவு நேரங்களில் பந்தயம் நடப்பது வாடிக்கையாக இருப்பதாகவும், இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், இதுபோன்ற பந்தயங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.