கொழும்பு நீச்சல் கழகத்தின் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மரணம்.
இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்பு நீச்சல் கழகத்தின் நீச்சல் தடாகத்தில் விருந்தின்போது மூழ்கிய பாடசாலை மாணவர் ஒருவர் பத்து நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த செப்டெம்பர் 28 அன்று இடம்பெற்றது.
உயிரிழந்த அந்தச் சிறுவன், மொரட்டுவை, புனித தோமையர் கல்லூரியில் கற்கும் எட்டு வயதுடைய மாணவன் ஆவார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
வெலிகம நகரசபையின் முன்னாள் மேயரும் சமூக ஊடக ஆர்வலருமான ரெஹான் ஜெயவிக்ரம, உயிருக்காகப் போராடிய அந்தச் சிறுவன் ஆர்லன், ஒக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை அன்று காலமானதாகத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீச்சல் கழகத்தின் மீது குற்றச்சாட்டு
இந்த விபத்து குறித்து, சிறுவனின் பெற்றோர் மீது பழிபோட நீச்சல் கழகம் முயற்சி செய்வதாகக் கூறி ரெஹான் ஜெயவிக்ரம கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்பு நீச்சல் கழகத்தின் அலட்சியமே 8 வயது சிறுவன் விபத்துக்குள்ளாகக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
விபத்து நிகழ்ந்த செப்டெம்பர் 28ஆம் திகதி, நீச்சல் கழகம் வெளியிட்ட அறிக்கையில், சிறுவனின் பெற்றோர் கழகத்தின் விதிகள் மற்றும் உயிர்காக்கும் ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதாலேயே விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், சிறுவனை நீச்சல் கழகத்தின் ஊழியர்கள் வைத்தியசாலைக்குக்கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த ஒருவரே சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் எனவும் முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரம சுட்டிக்காட்டியிருந்தார்.
An eight-year-old student from St. Thomas’ College, Moratuwa, has tragically died on October 7th after drowning in the pool at the Colombo Swimming Club on September 28th. The incident, which occurred during a party, is currently under police review. Former Weligama Mayor Rehan Jayawickreme strongly criticized the Club for its alleged negligence and for attempting to shift the blame to the parents. Jayawickreme also highlighted that the club staff failed to take the child to the hospital; instead, a person from the nearby gym took the boy for treatment.