இந்தியாவிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு படகு மூலம் தாயகம் திரும்பிய ஒரு குடும்பஸ்தர், கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவந்த தகவலின்படி, முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர், 2007ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் கடல் வழியாக இந்தியா சென்றிருக்கிறார்.
கடந்த 18 வருடங்களாக அங்கேயே வசித்து வந்த அவர், மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார். அதன்படி, கடந்த 22ஆம் தேதி இந்தியாவில் இருந்து படகில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்திருக்கிறார்.

அப்போது தலைமன்னார் கடற்படையினர் அவரை கைது செய்துள்ளனர். 40 வயதாகும் அவருக்கு இதய நோய் இருப்பதற்கான மருத்துவ அறிக்கைகளையும் உடன் கொண்டு வந்திருக்கிறார். இருந்தபோதிலும், தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபரை, கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், கடற்படையினர் அவரை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க, பொலிஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவரை, பதில் நீதவான் பார்வையிட்டபோது, எதிர்வரும் 28ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதய நோயாளியான தான், மருத்துவ அறிக்கைகளைக் காட்டியபோதும் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியதாக அவர் தனது உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


