சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் ஒருவரின் நிதிப் பங்களிப்புடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படவுள்ளது. பொருளாதாரக் காரணங்களால் திருமணம் செய்ய முடியாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு உதவவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், சிங்கப்பூரில் வாழும் ரி.ரி.துரை சுமதினி என்பவரே இந்த 108 தம்பதிகளின் திருமணத்திற்கும் நிதி உதவி செய்கிறார். இந்தத் திருமணத்தில் தாலி, சீதனம் உட்பட திருமணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அந்த ஜோடிகளுக்கு வழங்கப்படவுள்ளன. தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (28) இந்தத் திருமண நிகழ்வு நடைபெறும்.


