நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், சமீபத்தில் துபையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இந்தத் தகவல் உண்மையே என உறுதிசெய்துள்ளார். அந்த விருது விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், “46 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போவதாக வந்த தகவல் உண்மையா?” என்று கமல் ஹாசனிடம் நேரடியாகவே கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது நீண்ட நாள் கழித்து நடக்கிறது. நாங்களாக விரும்பித்தான் தனித்தனியே பிரிந்து பணியாற்றினோம். ஒருமுறை ஒரு பிஸ்கட்டை இருவருக்கும் பகிர்ந்து சாப்பிட்டோம். அதன் பின், ஆளுக்கொரு பிஸ்கட் கிடைத்தபோது, அதை நன்றாக வாங்கிச் சாப்பிட்டோம். இப்போது மீண்டும் அரை பிஸ்கட் கிடைத்தாலே போதும் என்கிற மகிழ்ச்சி இருவருக்கும் உள்ளது. அதனால் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம். எங்களுக்குள் நீங்கள் தான் போட்டியை ஏற்படுத்தி உள்ளீர்கள். ஆனால், எங்களுக்குள் போட்டி என்பதே இல்லை. ஒரு காலத்தில் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே இருவரும் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். அதைத்தான் இப்போது வரை கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பது வணிக ரீதியாக பெரிய விஷயம், எங்களுக்கு அல்ல” என விளக்கமளித்துள்ளார்.
இதன் மூலம் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது, கமல் 237ஆவது படத்திலும், ரஜினி ஜெயிலர் – 2 படத்திலும் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, மூன்று முடிச்சு, 16 வயதினிலே என இருவரும் இணைந்து 18 படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக, 1985ஆம் ஆண்டு வெளியான ஜெராஃப்தார் என்ற ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
Actor Kamal Haasan has confirmed that he will be acting with actor Rajinikanth again after 46 years. The two stars, who began their careers together and acted in 18 films, will now star in a new movie directed by Lokesh Kanagaraj. At a recent award ceremony, Kamal Haasan stated that their reunion is a source of happiness for both of them and that any perceived rivalry between them was created by the public. He emphasized that their collaboration is a significant event for the film industry, not for them personally, as they have always maintained a friendly relationship.