இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பெயிண்டர், தனது நிலத்தை விற்று வங்கிக் கணக்கில் ரூ. 13 லட்சத்தைப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பணம் திடீரென மாயமானதைக் கண்ட அவர், வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர், பணம் காணாமல் போனது பற்றியும், வங்கியில் புகார் அளித்திருப்பது குறித்தும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது 13 வயது மகன், தனது அறையில் படிக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது தங்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே லக்னோவில், கடந்த மாதமும் 18 வயது இளைஞன் ஒருவன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குடும்பத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்திவிட்டதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விளையாட்டுகளால் பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.