இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினருக்கு இந்த வழக்கில் உதவியாக இருந்தது குற்றவாளிகள் வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் தான்.
கான்பூரைச் சேர்ந்த 22 வயது சூரஜ் குமார் உத்தம், 20 வயதுடைய அகன்க்ஷா என்ற உணவக ஊழியரை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக சந்தித்துள்ளார்.
சுமார் 10 மாதங்களாக, இருவரும் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 21 அன்று, அகன்க்ஷாவிற்கு சூரஜ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமாரின் உதவியை நாடியுள்ளார்.
இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தூரம் பயணம் செய்து, சிலாக்காட்டில் உள்ள யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்த கொடூரமான செயலைச் செய்த பின்னர், சூரஜ் அந்த சூட்கேஸுடன் ஒரு செல்ஃபி எடுத்து, அதைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
ஜூலை 22 முதல் அகன்க்ஷாவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர். தற்போது, ஆற்றில் வீசப்பட்ட அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
In Uttar Pradesh, a man killed his girlfriend, stuffed her body in a suitcase, and threw it into a river. The police were able to identify and arrest him and his friend after he posted a selfie with the suitcase on his WhatsApp status.