கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 38 வயதான கபடி பயிற்சியாளர் ஒருவர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். அத்துடன், அவர் சூலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி அளித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் கபடி பயிற்சியாளரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வேறுவிதமாகப் பார்த்ததோடு, சில மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பள்ளியின் மைதானத்தில் தனியாக இருந்த 4 மாணவிகளைப் பயிற்சி கொடுக்கிறேன் என்று அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியையிடம் முறையிட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியை உடனடியாகக் கருமத்தம்பட்டி மகளிர் பொலிஸ் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். பொலிஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கபடி பயிற்சியாளர் அருண்குமார் பயிற்சி கொடுப்பதாகக் கூறி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, பொலிஸார் அருண்குமாரைக் கைது செய்தனர். அவர் வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
_________________________________________________________________
A 38-year-old Kabaddi coach, Arunkumar, has been arrested under the POCSO Act in Coimbatore district, India, for sexually harassing government school students. The coach, who conducted training at a government school near Sulur, allegedly abused four female students after taking them aside on the school playground under the guise of practice. Following a complaint by the school’s headmistress, police arrested the coach and are now investigating if more students were victimized.