ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த ஓட்டல் உரிமையாளரை வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் கன்ஹி – பிதோரா நெடுஞ்சாலையில் விஜய் குமார் (வயது 47) என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலுக்கு அபிஷேக் என்ற இளைஞர் உணவு வாங்க வந்துள்ளார்.
ஆத்திரத்தில் துப்பாக்கிச்சூடு
அபிஷேக் சைவ பிரியாணி பார்சல் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் அசைவ பிரியாணி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், தனது கூட்டாளிகளுடன் ஓட்டலுக்கு மீண்டும் வந்து விஜய் குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அபிஷேக், தான் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியால் ஓட்டல் உரிமையாளர் விஜய் குமாரை சரமாரியாகச் சுட்டார்.
இந்தச் சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஜய் குமாரை மீட்ட ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விஜய் குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
A shocking incident occurred in Jharkhand’s Ranchi district where a customer named Abhishek shot and killed a 47-year-old restaurant owner, Vijay Kumar, after mistakenly being given non-vegetarian biryani instead of the vegetarian biryani he had ordered for takeaway. Enraged by the error, Abhishek and his accomplices returned to the restaurant, engaged in a heated argument, and Abhishek then shot the owner multiple times before fleeing; police have registered a case and are intensively searching for Abhishek and his associates.