யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் அறியவந்ததாவது, உயிரை மாய்ப்பதற்கு முயற்சி செய்த ஒரு இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இரவு வேளையில் வைத்தியசாலைக்குள் சென்ற ஒரு நபர், சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் விவரங்களைக் கூறி, அவரைப் பார்ப்பதற்கு வழிகாட்டுமாறு அங்கிருந்த ஓர் அம்புலன்ஸ் சாரதியைக் கேட்டுள்ளார்.

இதன்போது, அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அம்புலன்ஸ் சாரதி, அவருக்கு வழிகாட்ட மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அந்த அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்வதற்காக அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீதும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, தாக்குதல் நடத்திய அந்த நபர் ஏனைய பொலிஸாரால் உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரைச் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே இவர் வந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
A man carrying a knife forcibly entered the Jaffna Point Pedro Base Hospital and assaulted an ambulance driver and a police officer on security duty. The incident occurred after the suspect asked the ambulance driver to guide him to see a youth admitted to the emergency unit following a suicide attempt; when the driver refused due to suspicion, the man attacked him and the subsequent police officer. The man was eventually surrounded and arrested, and police suspect his intention was to attack the hospitalized youth.


