அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடப்பட்டமைத் தொடர்பில் இதுவரை 57 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஜனாதிபதியால் அவசரகால நிலை பிரப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தரப்பத்ததில் சமூக ஊடகங்களில் ஒரு சில முறைக்கேடான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் மக்கள் குழப்பத்துக்கு ஆளாகியும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் உலாவரும் போலிப் பதிவுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சுமார் 57 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேற்படி குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளது. மக்களை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலத்தில் வதந்தி அல்லது போலித் தகவல்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும், மின்னணு, டிஜிட்டல் அல்லது பிற தொழில்நுட்பங்களின் ஊடாகப் பகிரும் நபருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 5 வருடங்களுக்குக் குறையாத சிறை தண்டனை வழங்கப்படும் என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு செயற்படவும்.
இயற்கைச் சீற்றத்தில் நிலைகுலைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு முன்னிற்கும் நிறுவனங்களுக்குத் தமது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
The Police Media Spokesman, ASP F.U. Woodler, announced that 57 complaints have been registered with the Criminal Investigation Department (CID) regarding the improper posting of false news on social media, which is causing panic and inconvenience among the public during the declared State of Emergency. He warned that strict legal action, including potential imprisonment of no less than five years, will be taken against individuals who spread rumors or fake news through any means (verbal, written, electronic, or digital) intended to cause fear and confusion. The police and military are authorized to take action against such offenders, and the public is urged to cooperate with institutions working to rebuild the country.


