கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் அந்தப் பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத்தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்த அவசர நிலையைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தக்குமார் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்சதார், தொடர்புடைய பொறுப்பதிகாரிகள், வெரலகொட பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநகர சபை ஊழியர்கள் எனப் பலர் உடனடியாகக் களத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

களத்தில் நிலைமையை ஆய்வு செய்த மேயர், அடுத்தகட்டமாக எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கலாம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி உதவிகள், நீண்டகாலப் பாதுகாப்பு வீட்டுத் திட்டங்கள் போன்ற விடயங்களில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என உறுப்பினர் ஆனந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வீட்டு வசதிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தக்குமார், கொழும்பு மாவட்டச் செயலகச் செயலாளர் சந்தருவன், கிராம சேவகர் நித்தியானந்தன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக மண் சரிவு மற்றும் கட்டிட இடிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Five houses in the 95th Estate area on Jampettah Street in Colombo collapsed earlier today due to adverse weather conditions, though no casualties were reported as the resident families had been relocated to temporary shelters beforehand due to the risk posed by heavy rains. Following the collapse, the Colombo Municipal Council (CMC) Mayor, Viraj Kelly Palsathar, alongside police, fire brigade, and CMC staff, inspected the site and assured that urgent steps would be taken to implement safety measures, provide immediate aid, and develop long-term secure housing plans for the affected residents.


