அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பாக, பிரதி காவல்துறை மாஅதிபரின் மனைவி கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர், அந்தப் பகுதிக்கு அவர் சென்றதற்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆதாரங்களைச் சரிபார்க்கும் வகையில், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் குற்றப் புலனாய்வுத் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க, சந்தேகநபரின் கணவரான பிரதி காவல்துறை மாஅதிபரை கொழும்பிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், காவல்துறை மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதி காவல்துறை மாஅதிபரின் மனைவி உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டபோது, பிரதி காவல்துறை மாஅதிபர் அனுராதபுரத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த புதையல் தோண்டப்பட்ட சம்பவம் பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கில் பிரதி காவல்துறை மாஅதிபரின் சாரதியிடம் இருந்து சில முக்கிய உண்மைகள் வெளிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதையல் தோண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற நபர்களுக்கும், பிரதி காவல்துறை மாஅதிபரின் மனைவிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும், அவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.