வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும் துயரங்கள் குறித்து வடமாகாண நீதி, சமாதான நல்லிணக்கப் பணியகம் தனது அறிக்கையில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ் தாயகப் பகுதிகளின் அவலநிலை இன்னும் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து சொத்து இழப்புகள், உயிரிழப்புகள், மற்றும் உரிமைகள் பறிபோதல் ஆகியவை நடந்துகொண்டே இருக்கின்றன.
உயிரிழப்புகள்
நாம் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல அழியும் இனமாக மாறிக் கொண்டிருக்கிறோம். முதலில் இன வன்முறைகளால் கொல்லப்பட்டோம். எஞ்சியவர்களில் பலரை கொரோனா, சுனாமி போன்றவற்றில் இழந்தோம். இப்போது எஞ்சியிருக்கும் உயிர்களை வீதி விபத்துகளில் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
அதிகரித்து வரும் வீதி விபத்துகளும், அச்சமூட்டும் கொலைகளும் பெருகிவரும் இந்த நேரத்தில், வடமாகாணத்தில் செயல்படும் நீதி, சமாதான நல்லிணக்கப் பணியகம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறது.
மிகவும் நெருக்கடியான மற்றும் முக்கியமான சந்திப்புகளில் சிக்னல் விளக்குகளைப் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு, பாரவூர்தி உரிமையாளர் சங்கங்கள், தனியார் மற்றும் அரசு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை தங்கள் அமைப்புகளில் பணிபுரியும் சாரதிகளுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனை வழிகாட்டுதல்களை அளித்து, அவர்களின் மனநலனை மேம்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக பணியாற்றக்கூடிய சூழ்நிலைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
வேண்டுகோள்
இத்தகைய அமைப்புகள், இந்த நிலைமையை மாற்ற திட்டமிடப்பட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயம்.
மேலும், சமூக பொது அமைப்புகள் மற்றும் போக்குவரத்துப் காவல்துறை உட்பட அனைவரும் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும்.
மேலும், இந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் சாரதிகளுக்கான மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வடமாகாண நீதி, சமாதான நல்லிணக்கப் பணியகம் தயாராக உள்ளது.
அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதேச சபை நிர்வாகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உறுதியான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இது தங்களின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் பணிவோடு முன்வைக்கிறது.