பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தச் சோதனைகளில், பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சட்டம் மேல் மாகாணத்தில் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்தது. இது தொடர்பாகக் கடந்த இரண்டு வாரங்களாகப் பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், நேற்று முதல் அந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்பதுடன், எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகள் இடம்பெறும் எனவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அந்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க அவர்கள், “பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயணச் சீட்டுக்களைப் பயணிக்கும்போது தம்வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அத்துடன், பயணக் கட்டணத்தை இரு மடங்காகச் செலுத்தவும் வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “பயணக் கட்டணம் என்பது அந்தப் பேருந்து பயணத்தை ஆரம்பித்து பயணத்தை நிறைவு செய்யும் தூரத்திற்குரிய கட்டணமாகும். அதனை விடுத்து பயணிகள் ஏறிய இடத்தில் இருந்து செல்லும் தூரம் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்” என்றும் அவர் விளக்கினார்.
அதேநேரம், “நீங்கள் கேட்டும் நடத்துனர் உங்களுக்கான பயணச் சீட்டை வழங்கவில்லையாயின் 070 – 2860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு” காமினி ஜாசிங்க பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இது தொடர்பான சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
The Western Province Road Passenger Transport Authority reported that on Wednesday (the 15th) alone, 217 buses were inspected regarding ticket issuance, resulting in fines for 18 conductors who failed to issue tickets and 5 passengers travelling without one. This regulation, which imposes fines on both ticketless passengers and non-compliant conductors, was enforced strictly from yesterday following a two-week awareness period, with the Authority’s Chairman, Gamini Jasinghe, clarifying that passengers without a ticket face a Rs. 100 fine plus double the full route fare and urging the public to report conductors who refuse to issue tickets to 070 – 2860860.