யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) வரையில் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாகவும், நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமையவே பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (26) நடைபெற்ற அமர்வின் போது, நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை இறங்குதுறை அபிவிருத்திக்கு 3455 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது. அதன் இலாப விவரங்கள் பின்வருமாறு: 2022 ஆம் ஆண்டு 82 மில்லியன் ரூபாய், 2023 ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபாய், 2024 ஆம் ஆண்டு 76 மில்லியன் ரூபாய், 2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளது.
விமான நிலையத்துக்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்கள திட்டமிடல் இலக்கம் (PPA) 1597 இன் பிரகாரம் 35.9 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நட்டஈடு தொடர்பான தகவல்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ளன. ஏனைய காணிகள் சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்படவில்லை.
இதற்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன. பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்திப் பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளைக் கேட்பது பொறுத்தமானது. மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்காக காணிகள் கைப்பற்றப்படவில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
___________________________________________________________________
Minister of Transport, Highways Development, Ports and Civil Aviation, Bimal Rathnayake, stated in Parliament that the Jaffna Palaly International Airport has recently become profitable, recording a profit of 85 million rupees by August 2025. He emphasized that the airport’s development is based on expert planning, not political agendas. The Minister also disclosed that 150 million rupees have been spent on the airport’s development in 2025, and 3455 million rupees have been allocated for the Kankesanthurai Port development in collaboration with India. He confirmed that while 35.9 acres were acquired in 1950 by the Civil Aviation Department, other land acquisitions for expansion are handled by the Ministry of Defence, and no land has been newly seized for airport or port development in the Northern and Eastern Provinces.