தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலான நாட்களில் தீபாவளி பண்டிகைக்காக இந்தச் சிறப்பு பேருந்துச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தையை மையமாகக் கொண்டு பயணிகளுக்கான பேருந்துப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவான பயணிகள் பயணிக்கும் ஹட்டன்–பதுளை மற்றும் வவுனியா–யாழ்ப்பாணம் போன்ற வழித்தடங்களில் மேலதிக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த வழித்தடங்களுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள பேருந்துகள் அனைத்தும் முழுமையான கொள்ளளவுடன் சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கும் பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இவற்றுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் பஸ்டியன் மாவத்தையில் உள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் வழங்கப்படும் எனவும், இதற்காகக் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதிப் பயணம் நிறைவடைந்த பின் கொழும்பு திரும்பும் பயணிகளுக்காகவும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கான மாகாண போக்குவரத்து அதிகாரசபைகளுக்கு, தற்காலிக அனுமதிப்பத்திரங்களின் கீழ் பேருந்துகளை இயக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேவைப்படும் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் ஏற்கெனவே மாகாண போக்குவரத்து ஆணையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் மேற்பார்வை செய்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
‘1955’ என்ற அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் எனவும், நடமாடும் ஆய்வுக் குழுக்கள் தொடர்ந்து வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
The National Transport Commission has announced special bus services starting today in view of the Deepavali festival, running until the 20th. These special services will be centered at Bastian Mawatha, Pettah, and will deploy additional buses on high-demand routes like Hatton–Badulla and Vavuniya–Jaffna, ensuring all permitted buses operate at full capacity. Temporary permits for services, including those from the Western Province Transport Authority, will be issued at the NTC office, with arrangements also made for passengers returning to Colombo after the long weekend. The NTC has warned of strict action against buses overcharging passengers, with a 24-hour emergency line (1955) and mobile inspection teams in operation.