அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய தினத்திற்குள் (04) முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:

மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 11 இடங்களில் மாகாணத் தொடர்புகளை வழங்கிய பைபர் (ஃபைபர்) வலையமைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 09 இடங்கள் 24 மணி நேரத்திற்குள் அமைச்சின் நேரடித் தலையீட்டில் சரிசெய்யப்பட்டன.
தற்போது அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் தொலைத்தொடர்புச் செயல்முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் பைபர் வலையமைப்பின் மூலம் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட மின்தடைகள் மற்றும் பைபர் இணைப்புத் துண்டிப்பினால் 4,000க்கும் அதிகமான பிரதான அலைபரப்பு கோபுரங்கள் செயலிழந்தன.
தற்போது அவற்றில் 2,800 இற்கும் அதிகமானவை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியவற்றில் 949 கோபுரங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செயலிழந்துள்ளன. ஏனைய அனைத்து இடங்களையும் மீண்டும் இயங்க வைப்பதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக வேகமாகச் செயற்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்புக் கோபுரங்களுக்கு விரைவாகச் சென்று தேவையான மின் வசதிகளை வழங்குவதற்கு முப்படையினரின் அதிகபட்ச ஒத்துழைப்புக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் 28 அன்று அனர்த்தம் ஏற்பட்ட போது, தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும்,SMS அனுப்புவதற்கான வசதியை ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை நாங்கள் தயார் செய்தோம். எனினும், 29ஆம் திகதி பைபர் தொடர்புகள் கணிசமான அளவு சீரமைக்கப்பட்டதால் அது தேவையில்லாமல் போனது.
தற்போது நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றில் நுவரெலியா மற்றும் கண்டியில் குறிப்பிடத்தக்களவு பிரச்சினைகள் உள்ளன.
நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாளை காலைக்குள் 75%க்கும் அதிகமான தொடர்புகளைச் செயற்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன் கண்டியில் தற்போதுள்ள 65% எனும் அளவை நாளை காலைக்குள் 70%வரை கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.
தற்போது 80%க்கும் அதிகமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நாளைய தினத்திற்குள் அதனை 100%வரை சீரமைக்க முடியும் என்று நம்புகிறோம்.
Deputy Minister of Digital Economy, Eranga Weeraratne, stated that the telecommunication and internet networks, which were severely affected by the recent disaster, are expected to be fully restored by tomorrow (04th). He noted that 9 out of 11 provincial fiber network breaks caused by landslides and floods were fixed within 24 hours, and while over 4,000 transmission towers initially failed, more than 2,800 are now operational. The remaining 949 inoperable towers are mainly due to power outages. The Ministry aims to restore over 75\% connectivity in Nuwara Eliya and Puttalam districts, and 70\%in Kandy, by tomorrow morning, believing 100\% restoration can be achieved by the end of tomorrow.


