‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்த முடியும் என அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
‘இலங்கை அரச கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகள் கடந்த ஒருவார காலமாகச் செயலிழந்தன.
சுமார் 34 அரச நிறுவனங்களின் சேவைகள் இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக ICTA குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் இணையவழியிலான வருமான வரி அமைப்பு (eRL 2.0) (மேல் மாகாணம் தவிர), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்திச் சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The Information and Communication Technology Agency (ICTA) has announced that the technical issues in the ‘Lanka Government Cloud’ (LGC) service have been fully resolved, and public access to all affected government online services, which had been down for over a week, is restored as of today (the 21st). The disruption affected services of about 34 government institutions, including the issuance of birth/marriage/death certificates, online revenue licenses, Police Clearance Certificates, and various department websites.