யாழ். சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனமொன்றை, அதே திசையில் சென்ற உந்துருளி ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முந்திச் செல்ல முயன்ற அந்த உந்துருளி, எதிர்த் திசையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்ற 20 வயதான இளைஞர் ஒருவர் செலுத்திய உந்துருளியுடன் மோதியுள்ளது. இந்த மோதலில், அந்த இளைஞர் அருகில் பயணித்த வாகனத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
________________________________________________________________________
A young man was killed and a woman was seriously injured in an accident on the A9 road at Nunavil East, Chavakachcheri, Jaffna. The incident occurred when a motorcycle attempting to overtake a vehicle collided head-on with another motorcycle coming from the opposite direction. The 20-year-old rider of the second motorcycle, from Meesalai Puththur Junction, was thrown onto a nearby vehicle and died instantly. The injured woman was transferred from Chavakachcheri Base Hospital to Jaffna Teaching Hospital for further treatment. Chavakachcheri Police are investigating the incident.


