அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நாடளாவிய போராட்டம் நடாத்தப்படும் என வடக்கு-கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், வடக்கு பகுதியில் 2500க்கும் மேற்பட்ட உள்வாரி பட்டதாரிகள் உள்ளனர் என குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டு அரசால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டபோதும், 2014 ஆம் ஆண்டு உயர்தரத்தை முடித்த 2020/2021 பட்டதாரிகளுக்கு அவசரமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களின் வேலைவாய்ப்பு நிலை குறித்து அரசுக்கு எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. கொரோனா பேரிடர், பல்கலைக்கழக கல்வியியலரல்லாத ஊழியர்களின் போராட்டம் போன்ற காரணங்களால் பட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகத்தின் மற்ற பகுதிகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.