நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து எழுந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக 70 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விநியோகம் செய்ய தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம், அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், 70 நிலையங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைச் சுற்றியுள்ள முரண்பாடுகளின் காரணமாக கப்பல் திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்கள் எனவும், ஒப்பந்த சிக்கல்களால் கப்பல் திரும்பியதால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதெனவும் கபில நாபுடுன்ன கூறியுள்ளார்.
சவூதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் இருந்து இரண்டு மாத கடன் அடிப்படையில் எரிபொருள் பெற வாய்ப்பு இருந்த போதிலும், அதனை பயன்படுத்த தவறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய ஒப்பந்தமின்றி எரிபொருள் வாங்க வேண்டாம் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.