தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் ஒளிபரப்பும் சரிகமப லிட்டில் சாம்பியனில், இம்முறை கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி யாதவி தன் இசை திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
யாதவி, யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தை பின்புலமாகக் கொண்டவர். புலம்பெயர் வாழ்விலும், தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், இசைத் துறையில் மிகுந்த விருப்பமும் ஆர்வமும் கொண்டவர் என்பதை அவரது ஆற்றல் உணர்த்துகிறது.
புலம்பெயர் ஈழத்துச் சிறுவர்கள் பலரும், தங்கள் திறமைகளால் பல்வேறு துறைகளில் முன்னேறி பிரபலமடைந்துவருகின்றனர். குறிப்பாக, தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் திறனாய்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை உலகத்திற்கு காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் ஜீதமிழ் சரிகமப இசைப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிக்ஷா வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. அந்த வரிசையில், இவ்வாண்டு சரிகமப லிட்டில் சாம்பியனில் யாதவி பங்கேற்றிருப்பது ஈழத்து தமிழ் சமூகத்தின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாதவியின் சாதனை, இனி வரும் காலங்களில் அவரது இசைப் பயணத்திற்கு புதியதோர் உயரத்தை தருமென நம்பப்படுகிறது.