கணவர் வேலைக்கு போய்விட்டார்… குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர்.. என்றால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே முன்பக்க கதவை பூட்டு கொண்டு பூட்ட மறந்து விடாதீர்கள்… விதவிதமான வில்லங்கன்கள் வீடுதேடி வருகின்றனர்… அந்தவகையில் வீட்டிற்குள் புகுந்த வக்கிரனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு…
சென்னை, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வசித்து வரும் 25 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டின் முன்பக்க கதவை சாவி கொண்டு பூட்டாமல் சாத்தி வைத்து விட்டு சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது முன்பக்க வாசல் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த திருப்புளியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டின் அறையில் உட்கார வைத்துள்ளான்.

அந்த பெண்ணின் கை, கால்களை கட்டி போட்விட்டு, ஆடைகளை கலைந்து , அவரிடம் ஆபாசமாக நடந்து கொண்டு தன்னை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தான் சொன்னது போல கேட்காவிட்டால் இந்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.
இதனால் பயந்து போன அந்த பெண் அவன் சொன்னதை எல்லம் ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்துள்ளார். அவனது கைரேகை எங்கும் படாமல், அந்த பெண்ணை வைத்தே வீட்டில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் உனது நிர்வாண வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டி விட்டு தப்பிச் சென்றதாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் மூலம் துப்புத்துலக்கிய போலீசார் இந்த வில்லங்க கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார்(25), என்பதை கண்டுபிடித்தனர்.
திருடிய நகைகளுடன் அவர் கோயம்புத்தூரில் இருப்பதை கண்டறிந்த போலீசார் அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து அஜய் குமாரை கைது செய்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பட்டப்படிப்பு முடித்த அஜய்குமார் பல்வேறு தொழில்கள் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டு 9 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது மேலும் குடிப்பழக்கம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்ததால் அதிகரித்த அந்த கடனையும் அடைப்பதற்கு கடந்த சில மாதங்களாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்
கடந்த கொரோனா காலத்தில் நசரத்பேட்டையில் குடும்பத்துடன் தங்கியிருந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குறித்து தெரிந்து வைத்திருந்ததால் அங்கு சென்று திருடலாம் என முடிவு செய்துள்ளார்.
இன்டர்வியூ செல்வதாக கூறி நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு பூந்தமல்லி சென்றார். அங்கு ஒரு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஆட்டோ மூலம் நசரத்பேட்டைக்கு சென்று அந்த பெண்ணின் வீட்டில் புகுந்து மிரட்டி பாலியல் சீண்டல் கொடுத்து , அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான்.
தனது கையால் நகைகளை எடுத்தால் போலீசார் கைரேகைகளை பதிவு செய்து விடுவார்கள் என அந்த பெண்ணின் கையாலேயே வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளை எடுத்து கொடுத்ததையடுத்து அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் சென்று இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க மாஸ்க் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு போலீசாருக்கு முகம் தெரியாதபடி சென்றதும் தெரியவந்தது.
திருடிய நகைகள் சிலவற்றை விற்று அதில் வந்த பணத்தில் சில கடன்களை அடைத்து விட்டு உல்லாசமாக சுற்றி திரிந்த கொள்ளையன் அஜய் குமார், மேலும் சில நகைகளை போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் வழக்கிற்காக செலவு செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
கோயம்புத்தூரில் உள்ள தனது நண்பரிடம் நகைகளை விற்று கொடுக்கும்படி அதனை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அஜய்குமார் செல்போன் மற்றும் நம்பர்களை மாற்றி விட்டு எங்கும் அறை எடுத்து தங்காமல் விமான மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்தபடியே இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அஜய் குமார் கோவை விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்த நிலையில் போலீசார் விமான நிலையத்தில் வைத்து அவனை கைது செய்தனர்.
விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்து மறைத்து வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்ற போது போலீசாரின் பிடியிலிருந்து தப்பி சென்ற போது தவறி விழுந்ததில் அஜய் குமாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டின் முன்பக்க கதவுகளை பூட்டி வைக்க வேண்டும் அறிமுகம் இல்லாத நபர்கள் முகவரி கேட்பது போலவோ, குடிக்க தண்ணீர் கேட்பது போலவோ பேச்சுக்கொடுத்தால் கூடுமானவரை கதவை திறப்பதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் காவல்துறையினர்.
இல்லையென்றால் சங்கிலி இணைப்பு உள்ள கதவையோ அல்லது கதவில் காமிராவோ பொறுத்தி இருந்தால் வந்திருக்கும் நபர் யார் என்பதை அறிந்து உஷாராக இருக்க முடியும் என்கின்றனர் போலீசார்
கூடுமானவரை தனியாக இருக்கின்ற பெண்கள் எப்போது வெளியில் சென்று வந்தாலும் கதவுகளை பூட்டி வைப்பதை வழக்கமாக்குங்கள், வீட்டில் தொலைக்காட்சிகளை சத்தமாக ஓடவிட்டுக் கொண்டும், செல்போனில் மெய்மறந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டும் இருந்து விடாதீர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் வீட்டின் கதவுகளையும் ஜன்னல் கதவைகளையும் பாதுகாப்புக்காக பூட்டி வைத்துக் கொள்ளவேண்டும். காற்றுக்காக கதவை திறந்து வைத்தால் கூட முன்னதாக இரும்பு கம்பியிலான கேட் ஒன்றை அமைத்து பூட்டி வைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.
ஊதாரித்தனமாகவும், ஆடம்பரமாகவும் கடனுக்கு மேல் கடனை வாங்கி செலவழித்து விட்டு, கடனை அடைக்க கொள்ளையடித்த பட்டதாரி இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.திட்டமிட்டு செய்தாலும் , திடீரென செய்தாலும் குற்றம் கேடு தரும்..!