மட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி. பிரியந்த பண்டாரவின் கூற்றுப்படி, போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இரு வியாபாரிகள் இன்று புதன்கிழமை (20) அதிகாலையில் நகர்ப்பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலை நகர்ப்புற வீதியில் மாறுவேடத்தில் இருந்த பொலிஸ் குழுவினர், கொழும்பில் இருந்து பேருந்தில் வந்த ஒரு பல்கலைக்கழக மாணவரிடமிருந்து போதைப்பொருளைக் கைமாற்றும் போது இரு வியாபாரிகளையும் கைது செய்துள்ளனர்.
அவர்களில், 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லி கிராம் போதைப்பொருள் மற்றும் மற்ற 23 வயதுடைய நபரிடமிருந்து 4500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 1,20,640 ரூபா பணமும் 2 கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டு தலைமையக பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.