வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண பொலிஸ் வட்டார தகவல்களின் படி, அவர் போதனா வைத்தியசாலைக்கு சென்று, கடமைகளில் இடையூறு விளைவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, “தான் வரும்போது அனைத்து அதிகாரிகளும் எழுந்து நின்று தம்மை Sir என அழைக்க வேண்டும்” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடத்தை தொடர்பான முழு காணொளி காட்சிகளை பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
பொலிஸார், அவரது செயல்களைப் பொறுத்து தற்போது அமைதியாக செயல்படுகிறார்கள் என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து நாடாளுமன்றத்தின் மரியாதையை காக்க வேண்டியவர், நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றாரா என அவதானித்து வருகின்றனர்.
மேலும், அருச்சுனா எம்.பி. தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியும் அருச்சுனா தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள விவகாரம் குறிப்பிடத்தக்கது.