இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்க நேரிடக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்ததாகவும், மின்சார சபையின் உள்ளக செயல்பாடுகளில் மின்சார மாபியா இன்னும் செயல்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார சபையில் நிலவும் நெருக்கடி நிலைமையை எடுத்துக்கூறும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர்கள் முழு கொள்ளளவுக்கு இயங்காத நிலையை காரணமாகக் கொண்டு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் செயற்பாடு மின்சார மாபியாவை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இந்த மாபியாவே மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தபோதும், தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு செய்வது மிகுந்த செலவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மின்சார சபை இவ்வாறு செயல்பட்டால், வருகிற வருடம் வறண்ட காலமான பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மின்சாரம் கொள்வனவு செய்யத் தேவையான நிதி மின்சார சபைக்கு கிடைக்காத நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அந்நிலையில், நாடளவில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.