பண்டிகை காலத்தை முழுமையாக பயன்படுத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உலர் பழங்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சில மோசடி விற்பனையாளர்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நடவடிக்கையின் போது, சட்டத்தை மீறிய 11 பேரைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, கொழும்பு புறக்கோட்டை பகுதியில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் விற்பனை செய்யும் 178 மொத்த விற்பனை கடைகளில் விசேட சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோவிற்கும் அதிகமான உலர் பழங்கள் மனித பாவனைக்கு தகுதியற்றவை எனவும், மேலும் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் முறையாக பாவனைக்கு ஏற்றவை அல்ல என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இந்த கண்டுபிடிக்கப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன. தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்குப் பின் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உறுதியளித்துள்ளனர்.